குறைதீர்க்கும் கூட்டங்களில் கொடுக்கப்படும் மனுக்களை விசாரிக்க காலதாமதம் செய்யக்கூடாது கலெக்டர் உத்தரவு

குறைதீர்க்கும் கூட்டங்களில் கொடுக்கப்படும் மனுக்களை விசாரிக்க காலதாமதம் செய்யக்கூடாது என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2021-10-18 12:20 GMT

தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்டு கலெக்டர் கூறுகையில், "குறைதீர்க்கும் கூட்டங்களில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை 15 நாட்களுக்குள் விசாரித்து தீர்வு காண வேண்டும். மனுக்களை விசாரிப்பதில் அரசுத்துறை அதிகாரிகள் காலதாமதம் செய்யக்கூடாது. மனுக்களுக்கு தீர்வு காணாமல் நிராகரிக்கப்பட்டால் நிராகரிப்புக்கான காரணங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்க்கும் பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பில் பேட்டரி பொருத்திய நவீன சக்கர நாற்காலி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 5 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
தூய்மை தொழிலாளர்கள்
கூட்டத்தில் நாட்டு மாடுகள் நலச்சங்க தலைவர் கலைவாணன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "60 ஆண்டுகாலம் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களுக்கு அரசும், வனத்துறையும் பட்டா வழங்க வேண்டும். பட்டா கொடுக்க முடியாது என்றால் கடந்த 60 ஆண்டுகாலமாக வனப்பகுதியில் வழங்கப்பட்ட அனைத்து பட்டாக்களையும் ரத்து செய்து அனைத்து இடங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் சங்கத்தின் ஆண்டிப்பட்டி தாலுகா ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் தூய்மை தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. பல முறை மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் கருவேல்நாயக்கன்பட்டி வாசுகி காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். வாசுகி காலனியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதுபோல, புதிய தமிழகம் கட்சியினர் மாநில துணை அமைப்பு செயலாளர் பாலசுந்தர்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தே.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 25) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் தாக்கியதாகவும் இதில் காயம் அடைந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் இதுகுறித்து கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.


மேலும் செய்திகள்