தென்மாவட்ட ரெயில்களை வழக்கமான கட்டணத்தில் இயக்க வேண்டுகோள்
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், சிறப்புரெயில்களுக்கு பதிலாக வழக்கமான ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மதுரை,
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், சிறப்புரெயில்களுக்கு பதிலாக வழக்கமான ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சிறப்பு ரெயில்
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. சரக்கு பொருட்கள், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான பார்சல் ரெயில் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. பின்னர், ஜூலை மாதம் முதல் பயணிகளுக்கான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மட்டும் தொடங்கப்பட்டது.
ஆனால், அந்த ரெயில்களும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் ரெயில்கள் தவிர அனைத்து ரெயில்களின் சேவையும் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து, சிறப்பு ரெயில்களாக தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரெயிலாக இயக்குவதற்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கட்டண கொள்ளை
ஏற்கனவே, அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தால், டிக்கெட் கட்டணத்துடன் முன்பதிவு கட்டணமும் செலுத்த வேண்டி உள்ளது. பொதுப்பெட்டிகள் அனைத்தும் 2-ம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 200 கி.மீ.தூரத்துக்கு மேல் இயக்கப்பட்ட பயணிகள் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றம் செய்யப்பட்டு கட்டண கொள்ளை அடிக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்களை பொறுத்தமட்டில், பண்டிகைகால சிறப்பு ரெயில், சிறப்பு ரெயில் என 2 வகையாக ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் பண்டிகை கால சிறப்பு ரெயில்களில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பயணிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஆனால், பயணிகளின் நலனுக்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. உதாரணமாக தென்மேற்கு ரெயில்வே மண்டலத்தில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
மைசூரு எக்ஸ்பிரஸ்
இந்த ரெயிலில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு 2-ம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டியில் ரூ.385 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.170 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் மைசூர் எக்ஸ்பிரசில் ரூ.95 கட்டணமாகவும், முத்துநகர் எக்ஸ்பிரசில் ரூ.90 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு 90 சதவீதத்துக்கும் மேல் தளர்த்தப்பட்ட நிலையில், சிறப்பு ரெயில்களை மாற்றி வழக்கமான ரெயில்களாக கூடுதல் கட்டணம் இல்லாமல் இயக்க வேண்டும் என்பதே தென்மாவட்ட பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.