கால்வாயில் உடைப்பு; 1,200 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
செங்கோட்டை அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் வயலில் வெள்ளம் சூழ்ந்ததால் 1,200 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் வயலில் வெள்ளம் சூழ்ந்ததால் 1,200 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளன.
நெல் சாகுபடி
தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியும் தமிழக எல்லைப்பகுதியுமான புளியரை பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மழை காரணமாக தற்போது அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
கால்வாயில் உடைப்பு
தெற்கு குறவன் பற்றுகுளம், வடக்கு குறவன் பற்றுகுளம், புதுக்குளம், தட்டான்பத்து குளம், சாஸ்தான் பற்று குளம், எல்லாபேரி குளம் உள்ளிட்ட 7 குளத்து நீர் சாத்தான்பத்து கால்வாய் வழியாக ஊருணியில் சென்று அதன்பின் அரிகரா ஆற்றில் கலக்கிறது.
இந்த கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது.
நெற்பயிர்கள் மூழ்கின
மேலும் இந்த தொடர் மழையினால் புளியரை, பகவதிபுரம், கட்டளை குடியிருப்பு, கற்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் வெள்ளம் சூழ்ந்தது.
தற்போது அந்த வயல்களில் நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. அந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து வெள்ளத்தில் மூழ்கின.
விவசாயிகள் கவலை
இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பாடுபட்டு உழைத்து கஷ்டப்பட்டு வளர்த்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு நிவாரணம் கிடைக்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
நெற்பயிர்கள் மூழ்கியது பற்றிய தகவல் கிடைத்ததும் தென்காசி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்ல முத்துராஜா, வேளாண் அலுவலர் ஷேக் மைதீன் மற்றும் அலுவலர்கள் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டனர். அதிகாரிகள் கூறிய கணக்குப்படி மொத்தம் 1,200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.