குமரியில் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
குமரி மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் மூழ்கியதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் மூழ்கியதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கொட்டி தீர்த்த கனமழை
குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்றுமுன்தினம் இரவு முதல் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. ஒரே நாளில் பேச்சிப்பாறையில் 21 செ.மீ. பதிவானது.
ஏற்கனவே அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது பெய்த தொடர் மழையால் ஒரே நேரத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் போன்ற அணைகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
இதனால் திற்பரப்பு அருவியே தெரியாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வெள்ளம் சிறுவர் நீச்சல் குளத்தையும், அருகில் உள்ள கல் மண்டபத்தையும் மூழ்கடித்தபடி செல்கிறது. குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளி ஆறு, கோதையாறு, பழையாறு உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருமனை, களியல் பகுதியில் உள்ள பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அருமனை-களியல் சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளம் புகுந்ததால் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தவர்களை குலசேகரம் தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகளில் சென்று பத்திரமாக மீட்டனர். குழித்துறை ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை மூழ்கிய நிலையில் தண்ணீர் செல்வதால், அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
பஸ் போக்குவரத்து பாதிப்பு
மார்த்தாண்டம், வெட்டுமணியில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் சாலையில் சென்னித்தோட்டம் பகுதியில் ஆற்றுவெள்ளம் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள், பெட்ரோல் பங்க் மற்றும் கடைகளையும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவித்தனர். இதனால் வெட்டுமணியில் இருந்து முன்சிறை, புதுக்கடை, தேங்காப்பட்டணம், இனயம் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் அரசு பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
வெட்டுமணி தூய அந்தோணியார் திருத்தலம் வரை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் அமைந்துள்ள மீன்சந்தை முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியது.
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியில் சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியதோடு, ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
செங்கல் சூளைகள் பாதிப்பு
குழித்துறை கல்பாலத்தடி சாலையில் ஆற்றுவெள்ளம் புகுந்ததால் குழித்துறையில் இருந்து கழுவன்திட்டை, மேல்புறத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக சென்று வந்த பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. வாழைத்தோட்டங்கள், நர்சரி கார்டன்களிலும் வெள்ளம் புகுந்தது. குழித்துறை வாவுபலி பொருட்காட்சி மைதானமும், அங்குள்ள கால்நடை மருத்துவமனையும் வெள்ளத்தில் மூழ்கின.
ஞாறான்விளை நேசமணி பாலம் பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள், சாலைகள், தென்னந்தோப்பு, ரப்பர் தோட்டம் போன்றவற்றில் வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு தயாரித்து வைத்திருந்த லட்சக்கணக்கான செங்கற்கள் சேதம் அடைந்தன.
முகாம்களில் தங்க வைப்பு
முன்சிறை, மங்காடு, பள்ளிக்கல், பணமுகம், பார்த்திபபுரம், முட்டைகுளம், ஏலூர்முக்கு போன்ற பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் வீட்டின் மேல்மாடிகளில் பரிதவித்தனர்.
அவர்களை உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவியுடன் மீட்பு படையினர் படகுகளில் சென்று மீட்டு மங்காடு, வாவறை, பள்ளிக்கல் பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைத்தனர். இந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தீவாக மாறிய வைக்கல்லூர்
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மங்காடு உயர்மட்ட ஆற்றுபாலம் தண்ணீரில் மூழ்கியது. விரிவிளை கணபதியான் கடவு ஆற்றுப்பாலத்தை தண்ணீர் தொட்ட நிலையில் சென்றது.
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியோடு சேர்ந்து இருக்கும் வைக்கல்லூர் பகுதி முழுவதும் ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி தனி தீவு போல் காட்சி அளித்தது. அங்கு சிக்கி தவித்த மக்களை தீயணைப்பு துறையினர் படகுகளில் சென்று மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர். அவர்களில் சிலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் சிலர் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
எம்.பி., எம்.எல்.ஏ. ஆறுதல்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டனர். குறிப்பாக பணமுகம் பகுதியில சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் நடந்து சென்று அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தங்கி இருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், வெளியே வர முடியாமல் தவித்தவர்களை மீட்டு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். தொடர்ந்து பள்ளிக்கல் பகுதியில் உள்ள முகாமிற்கு சென்று அங்கு தங்கி இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறினர்.
மழை தொடர்ந்து பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் ஆற்றங்கரையோர மக்கள் அஞ்சுகிறார்கள். அதே சமயத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்பு பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.