ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக் கொலை

ஆலங்குளம் அருகே ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-10-17 20:46 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ஆட்டோ டிரைவர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் இளங்கோவன் (வயது 41). இவர் சென்னையில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவருடைய மனைவி உஷா. இவர் சங்கரன்கோவிலில் உள்ள கல்லூரியில் சமையலராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

பிணமாக கிடந்தார்

சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இளங்கோவன் பின்னர் வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்த நிலையில் நேற்று காலையில் ஆலங்குளம் அருகே ஊத்துமலையை அடுத்த பலபத்திரராமபுரம் குளத்தின் கரையில் இளங்கோவன் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் காஜாமைதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், இளங்கோவன் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை நடந்த இடத்தில் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்த மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இளங்கோவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இளங்கோவனை கொலை செய்த கொலையாளிகள் யார்? அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட இளங்கோவனின் தந்தை செல்லத்துரை, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலங்குளம் அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்