பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு

தொடர் மழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

Update: 2021-10-17 20:30 GMT
நெல்லை:
தொடர்மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் `கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது.

பலத்த மழை

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, வள்ளியூர், திருக்குறுங்குடி மற்றும் தென்காசி, பாபநாசம் ஆகிய இடங்களிலும் தொடர்ந்து மழை கொட்டுகிறது. 
நேற்று முன்தினம் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
அப்போது கோவிலுக்கு சென்ற 1,700 பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கினர். இவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு 108.30 அடியாக இருந்தது. மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் `கிடுகிடு'வென உயர்ந்தது. மாலை 5 மணிக்கு அணை நீர்மட்டம் 125 அடியாக இருந்தது.
நேற்று பாபநாசம் அணை பகுதியில் 275 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 863 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 1,915 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 சேர்வலாறு அணை

இதேபோல் சேர்வலாறு அணைப்பகுதியில் 144 மில்லிமீட்டர் மழை பெய்தது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 142.90 அடியாக உயர்ந்தது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74 அடியாக (முழு கொள்ளளவு 118 அடி) உயர்ந்தது.
இதேபோல் வடக்கு பச்சையாறு, நம்பியாறு மற்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள ராமநதி, கடனாநதி, கருப்பாநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் `கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே அடவிநயினார், குண்டாறு அணைகள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன.

கொடுமுடியாறு

இதேபோல் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் 18 அடி உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 51.50 அடி தண்ணீர் இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 52.50 அடி ஆகும்.
அணைக்கு வினாடிக்கு 639 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் முழுவதும் வள்ளியூரான் கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

வெள்ளப்பெருக்கு அபாயம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகள் நிரம்பி வருவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 
இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
இதையொட்டி தாமிரபரணி கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அம்பை, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட நகராட்சிகளின் சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்