இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி கரூர்-திருச்சி சாலையில் உறவினர்கள் மறியல்

இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி கரூர்-திருச்சி சாலையில் அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-10-17 18:56 GMT
கரூர், 
நிதி நிறுவனம்
கரூர் மாவட்டம் மாயனூரை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 35). இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவருக்கும் திருச்சி மாவட்டம் குறுமணியை சேர்ந்த கோமதி (32) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு சத்யராஜ் கோமதியின் உறவினர்களுக்கு போன் செய்து கோமதி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.
சாலை மறியல்
இதையடுத்து கோமதியின் உறவினர்கள் நேற்று காலை கரூர் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு கோமதி இறந்த நிலையில் இருந்துள்ளார். மேலும் கோமதியின் கணவர் சத்யராஜ் மற்றும் அவரின் பெற்றோர் அங்கு இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கோமதியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உரிய விசாரணை நடத்தி சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தையை மீட்டு ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறி கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் காந்திகிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனைதொடர்ந்து போலீசார் அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இருப்பினும் அவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்ததால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
போக்குவரத்து பாதிப்பு
அதனைதொடர்ந்து போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த கோமதியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் கரூர்-திருச்சி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்