விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.27 லட்சத்து 88 ஆயிரம் நிதி உதவி

நாகையில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.27 லட்சத்து 88 ஆயிரம் நிதிஉதவி போலீசார் சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2021-10-17 18:05 GMT
வெளிப்பாளையம்:
நாகையில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.27 லட்சத்து 88 ஆயிரம் நிதிஉதவி போலீசார் சார்பில் வழங்கப்பட்டது. 
விபத்தில் போலீஸ்காரர் சாவு
நாகை மாவட்டம் புஷ்பவனத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது37). இவர் தலைஞாயிறு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை 30-ந்தேதி ஒரு வழக்கு விசாரணைக்காக நாகை சென்றுவிட்டு திரும்பிய போது  விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பிரபாகரனின் குடும்பத்தினர் கஷ்டப்பட்டு வந்தனர். இந்தநிலையில் பிரபாகரனுடன் கடந்த 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 5 ஆயிரத்து 577 போலீசார் உதவிக்கரம் நீட்ட முடிவு செய்தனர். 
ரூ.27 லட்சத்து 88 ஆயிரம் நிதிஉதவி
அதன்படி 2003-ம் ஆண்டு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் 5 ஆயிரத்து 577 போலீசாரும் சமூக வலைதளங்களில் இணைந்தனர். ஒவ்வொருவரும் தலா 500 ரூபாய் வீதம் என மொத்தம் ரூ.27 லட்சத்து 88 ஆயிரத்து 500 நிதி உதவி வழங்கினர். இதில் பிரபாகரனின் மூத்த மகன் அகிலேஷ் (14) பெயரில் ரூ.11 லட்சத்து24 ஆயிரத்து 610, மற்றொரு மகன் அபூர்வன் (3) பெயரில் ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 606 காப்பீடு நிறுவனத்தில் டெபாசிட் செய்தும், பிரபாகரன் மனைவி பவானி (33) பெயரில் ரூ.6 லட்சத்து 25 ஆயிரம், தந்தை ராமஜெயம் பெயரில் ரூ.3 லட்சத்து 284 வங்கியில் டெபாசிட் செய்து அதற்கான காசோலையை பிரபாகரின் குடும்பத்தினரிடம் நேற்று போலீசார் வழங்கினர். 

மேலும் செய்திகள்