வயல்களில் வீணாகிய வைக்கோல்
கம்பம் பகுதியில் மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் நனைந்து வைக்கோல் வீணாகியது.
கம்பம்:
தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை தண்ணீர்மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன.
அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருக்கும் வைக்கோல்களை எந்திரம் மூலம் சுமார் 35 கிலோ எடை கொண்ட கட்டுகளாக கட்டப்பட்டு கேரள மாநிலத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கம்பம் பகுதியில் மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வைக்கோல் கட்டும் எந்திரங்களை வயலில் இயக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மழையில் நனைந்து வயல்களில் வைக்கோல் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.