ஓய்வூதியதாரர்கள் தபால்துறை மூலம் டிஜிட்டல் ஆயுள் சான்றுசமர்ப்பிக்கும் சேவை தொடக்கம்
ஓய்வூதியதாரர்கள் தபால்துறை மூலம் டிஜிட்டல் ஆயுள் சான்றுசமர்ப்பிக்கும் சேவைதொடங்கப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது குறித்து தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
டிஜிட்டல் ஆயுள் சான்று
ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அரசு அலுவலகங்களுக்கு சென்று, தங்களின் இருப்பை உறுதி செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.இதனால் மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி ஆயுள் சான்றிதழ் வழங்கும் திட்டம் தபால் துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் பல ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முறையில் கைரேகையை பதிவு செய்து ஆயுள் சான்று சமர்ப்பித்து பயன்பெற்று உள்ளனர். இந்த ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க தபால் அலுவலகங்களில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பயன்பெறலாம்
இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்கள், ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதிய துறை அலுவலகத்துக்கோ, ஓய்வூதிய வழங்கல் நிறுவனத்துக்கோ செல்ல தேவை இல்லை. ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், ஓய்வூதிய அடையாள அட்டை மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தபால் காரரை அணுக முடியாதவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்கு சென்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். தபால் நிலையத்துக்கும் செல்ல முடியாத ஓய்வூதியதாரர்கள் 0461-2377233 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க கோரிக்கை பதிவு செய்தால், உங்கள் பகுதி தபால் அதிகாரி, தபால்காரர் மூலம் ஓய்வூதியதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இதற்காக சேவை கட்டணமாக ரூ.70 வசூலிக்கப்படுகிறது.
எனவே தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தபால் நிலையங்களில் இயங்கி வரும் டிஜிட்டல் ஆயுள் சான்று சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.