தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கரடி மீட்பு
கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கரடி மீட்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கரடி மீட்கப்பட்டது.
தவறி விழுந்த கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அகனாடு எஸ்டேட் பகுதியில் சரிவர மூடப்படாத நிலையில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் உணவு தேடி வந்த கரடி ஒன்று தவறி விழுந்தது. சுமார் 10 அடி ஆழம் கொண்ட அந்த தொட்டிக்குள் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தது. ஆனாலும் அதில் இருந்து வெளியே வர முடியாமல் கரடி தவித்து கொண்டு இருந்தது.
இதற்கிடையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், நீர்தேக்க தொட்டிக்குள் இருந்து கரடி கத்தும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு சென்று பார்த்தபோது, கரடி தவறி விழுந்திருப்பது தெரியவந்தது.
தீப்பந்தங்களை ஏந்தி கண்காணிப்பு
உடனே கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தகவல் அளித்தனர். அதன்பேரில் வனச்சரகர் சிவா தலைமையில் வனவர் கோகுல்ராஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தொட்டிக்குள் விழுந்த கரடி வெளியே வருவதற்கு ஏதுவாக ஏணி அமைத்தனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு அந்த கரடி ஏணி வழியாக தொட்டியில் இருந்து வெளியே வந்தது. தொடர்ந்து அருகில் இருந்த முட்புதருக்குள் சென்று மறைந்தது. அந்த கரடி ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் தீப்பந்தங்களை ஏந்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.