வேலூரில் மனைவி இறந்த சோகத்தில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

வேலூரில் மனைவி இறந்த சோகத்தில் ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-17 12:42 GMT
வேலூர்

வேலூரில் மனைவி இறந்த சோகத்தில் ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜவுளி வியாபாரி

வேலூரை அடுத்த விருப்பாட்சிபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 42), ஜவுளி வியாபாரி. இவரின் முதல் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அவர், மேகலா (35) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். 

இந்தநிலையில் ராஜாவின் முதல் மனைவியின் மகன் மகேஷ் என்பவருக்கும் மேகலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மேகலா கடந்த 15-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேலூர் பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடைேய, ராஜாவின் 2-வது மனைவியும் இறந்து விட்டதால் அவர் சோகத்தில் இருந்து வந்தார். யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அன்றைய தினமே ராஜா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

ராஜா மயக்கமடைந்து கிடப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் அவருக்கு சுயநினைவு திரும்பியது. இதையடுத்து அவர் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி இறந்த சோகத்தில் ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்