உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூர் சென்றுவிட்டு களியாம்பூண்டிக்கு திரும்பி் சென்று கொண்டிருந்தார். அப்போது அம்மையப்பன் நல்லூரை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஸ்ரீதர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேராக மோதியது.
இதில் ஸ்ரீதர், பிரபு இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீதர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.