சேலத்தில் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை-கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்

சேலம் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-16 21:31 GMT
சேலம்:
சேலம் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
தீபாவளி சிறப்பு விற்பனை
சேலம் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டுப்புடவை உள்ளிட்ட ஆடைகளை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து முதல் விற்பனையை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்து கூறியதாவது:-
தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக 30 சதவீதம் வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள், மென் பட்டுப் புடவைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ரூ.7.10 கோடி இலக்கு
மேலும் கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும், ஆர்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்திற்கு ரூ.5.80 கோடி தீபாவளி விற்பனை இலக்காகவும், ஆத்தூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.75 லட்சமும், எடப்பாடி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.25 லட்சமும், மேட்டூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.30 லட்சமுமப்் தீபாவளி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி 2021 சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்குகிறது.
30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் கோபால், நிர்வாக குழு இயக்குனர்கள் பாலசுப்ரமணியன், லலிதா, ராஜ ராஜேஸ்வரி வினோத் மற்றும் விற்பனை நிலைய பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்