நம்பியாறு வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள்

பலத்த மழை காரணமாக திருக்குறுங்குடி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. வெள்ளத்தில் சிக்கி தவித்த பக்தர்கள் 800 பேரை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

Update: 2021-10-16 19:23 GMT
ஏர்வாடி:
பலத்த மழை காரணமாக திருக்குறுங்குடி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. வெள்ளத்தில் சிக்கி தவித்த பக்தர்கள் 800 பேரை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

நம்பி கோவில்

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதுவது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நம்பி கோவிலுக்கு செல்லவும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். 

பலத்த மழை 

பல மாதங்களுக்கு பிறகு கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாலும், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதாலும் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நம்பி கோவிலுக்கு படையெடுத்து வந்தனர்.

நேற்று முன்தினம் முதலே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. ஆனாலும் அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாரை சாரையாக கோவிலுக்கு வந்தனர். 

தரைப்பாலம் மூழ்கியது

இந்த நிலையில் நேற்று காலையில் திருக்குறுங்குடி பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்தது. இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இதனால் நம்பியாறு மற்றும் கால்வாய்களில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருக்குறுங்குடியில் இருந்து நம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் சப்பாத்து என்ற இடத்தில் நம்பியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது.

பக்தர்கள் தவிப்பு

இதனால் நம்பி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கி திரும்பி வர முடியாமல் தவித்தனர். பலர் கரையோரத்தில் நின்றபடி செய்வதறியாது திகைத்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, துணை போலீஸ் சூப்பிரண்டு ரஜித்வேதி மற்றும் வனத்துறையினர், போலீசார், நாங்குநேரி தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். 

800 பேர் மீட்பு

வெள்ளத்தில் சிக்கித்தவித்தவர்களை மீட்க உடனடி நடவடிக்கையில் இறங்கினர். அணி, அணியாக பக்தர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். 
பின்னர் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். 

அதன்பிறகு கலெக்டர் உத்தரவுப்படி, பாளையங்கோட்டை, வள்ளியூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரர்களும் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இதன் காரணமாக 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டனர்.

கலெக்டர் பேட்டி 

இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் கூறியதாவது:- 
திருக்குறுக்குடி பகுதியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து வனத்துறையினர் உடனடியாக தகவல் தெரிவித்ததால், போலீசார், தீயணைப்பு படையினர், வனத்துறையினர் மீட்பு பணியில் துரிதமாக இறங்கினர். முதலில் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருந்தது. 

அப்போது மழை வெள்ளம் அதிகளவில் சென்றதால், கோவில் பகுதியில் இருந்த குறிப்பிட்ட பக்தர்களை அங்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர் வெள்ளம் குறைய தொடங்கியதும், அங்கு நிறுத்தி வைத்திருந்த பக்தர்களையும் எளிதாக மீட்டோம். பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்