பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை,
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கடைசி சனிக்கிழமை
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வழிபாட்டு தலங்களில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடை நேற்று முன்தினம் முதல் அரசு நீக்கியது.
கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.இந்த நிலையில் அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நேற்று கடைசி புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
திருக்கோஷ்டியூர்
சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட ஸ்ரீசவுமிய நாராயண பெருமாள், காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள திருவேங்கடமுடையான் கோவில், தேவக்கோட்டை ரெங்கநாத பெருமாள் கோவில், திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவில், சிவகங்கை சுந்தரராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.சுவாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்களை கோவில் நிர்வாகம் சார்பில் போதிய சமூக இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.