சினிமா பாட்டு கேட்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்தரிக்கோல் குத்து

சினிமா பாட்டு கேட்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்தரிக்கோல் குத்து

Update: 2021-10-16 18:17 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள கிருஷ்ணசாமி புரத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 20). இவர் பொன்மலை வேலாயுதசாமி கோவில் அருகே உள்ள பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். 

அதே கடையில், கோவை சுந்தராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த மணி (50) என்பவரும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கட்டும் பணியில் 2 பேரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரேடியோவில் பழைய, புதிய பாட்டு கேட்பது தொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த மணி பூக்கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து கார்த்திகேயனை சரமாரியாக குத்தினார். 

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் மணி அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.  ஆஸ்பத்திரியில் கார்த்திகேயனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்த புகாரின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாட்டு கேட்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்