சிறுபாக்கம் பகுதியில் கால்நடைகளை திருடிய 3 பேர் கைது

சிறுபாக்கம் பகுதியில் கால்நடைகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2021-10-16 17:18 GMT
சிறுபாக்கம், 

சிறுபாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரசங்குடியில் நடந்த சென்ற 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் சிறுபாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், சேலம் மாவட்டம் வெடிகாரன்புதூரை சேர்ந்த பிரசாந்த் (வயது 24), இளங்கோவன் (20), என்பதும், கடந்த 3 மாதங்களுக்கு முன் சிறுபாக்கம் அடுத்த எஸ்.நரையூரில் விவசாய கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. 

மேலும், கூலி வேலை செய்து கொண்டு, அரசங்குடி, எஸ்.நரையூர் பகுதிகளில் கால்நடைகளை திருடி உள்ளனர். அதனை சேலம் மாவட்டம் புதூரான்காட்டை சேர்ந்த பிரவீன்குமார் (26) என்பவர் உதவியுடன் சரக்கு வாகனத்தில் ஏற்றி சேலத்திற்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. 

இதையடுத்து பிரசாந்த், இளங்கோவன், பிரவீன்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து  11 ஆடுகள், 2 மாடுகள், 1 கன்றுகுட்டி, 2 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்