நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்: காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு

நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்: காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு

Update: 2021-10-16 16:54 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தபோது என்ஜினீயரிங் மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
என்ஜினீயரிங் மாணவர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் சக்திவேல் (வயது 19). இவர் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் சக்திவேல் தனது நண்பர்கள் சிலருடன் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் முனியப்பன் கோவில் பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு அவர்கள் மகிழ்ச்சியுடன் குளித்து கொண்டிருந்தனர். 
அப்போது சக்திவேல் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். சக்திவேல் தண்ணீரில் மூழ்குவதை கண்ட நண்பர்கள் சத்தம் போட்டனர். இதை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் முயன்றும் சக்திவேலை மீட்க முடியவில்லை. இதனைதொடர்ந்து உடனடியாக வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 
சோகம்
பின்னர் ஆற்றில் இறங்கி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களும் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து தேடினர். இதையடுத்து நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு மாணவர் சக்திவேலை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நண்பர்களுடன் குளித்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் காடச்சநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=======

மேலும் செய்திகள்