பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

Update: 2021-10-16 16:23 GMT
திருப்பூர், 
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பக்தர்களுக்கு கோவில்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பெருமாள் கோவில்கள்
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் படிப்படியாக தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். கடந்த சனிக்கிழமைகளில் அரசின் கட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் அரசின் தளர்வு அறிவிப்புக்கு பிறகு புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதாலும் பெருமாள் கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கோவில்களுக்கு முன் பூக்கடைகளில் விற்பனை சூடுபிடித்தது. பெருமாளுக்கு உகந்த துளசி ஒரு கட்டு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று ஒரு கட்டு ரூ.25-க்கு விற்பனையானது.
பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும்போது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினார்கள். மேலும் நெரிசலை தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். அதுபோல் ஈஸ்வரன் கோவில் முன் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு திருப்பூர் திருப்பதி கோவில், குருவாயூரப்பன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நாட்களில் கோவில்களுக்கு சென்று குடும்பத்துடன் தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வந்த பக்தர்கள், நேற்று கோவில்களில் மனமுருக பிரார்த்தனை செய்தனர். இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்