வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்துக்கு, அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு, அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நினைவு தினம்
தூத்துக்குடியில் கட்டபொம்மனின் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் அலங்கரித்து வைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாஞ்சாலங்குறிச்சி
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோட்டையில் உள்ள வீரசக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவச்சிலைக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் தலைமையில் வீரசக்கதேவி ஆலய குழுத்தலைவர் முருகபூபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வீரசக்கதேவி ஆலய குழு செயலாளர் செந்தில், பொருளாளர் சுப்புராஜ் சவுந்தர், துணைத் தலைவர்கள் முருகேசன், வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க.
இதனைத் தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி கிராம பொதுமக்கள் மற்றும் ம.தி.மு.க சார்பில், தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. துணைச் செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை, பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி, பாஞ்சாலங்குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் யோகராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.