மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் கொலையில் 7 பேர் கைது

ஆரோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-16 15:10 GMT
விழுப்புரம், 

புதுச்சேரி மாநிலம் கோரிமேடு காமராஜர் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 55). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த பட்டானூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவராக பணியாற்றி வந்தார். கடந்த 14-ந் தேதி மாலை ஆயுதபூஜையை முன்னிட்டு பட்டானூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மோட்டார் கொட்டகையில் படைப்பதற்காக தனது வீட்டில் இருந்து மணிவண்ணன், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
பட்டானூர் திருநகர் பகுதியில் அவரை ஒரு கும்பல் திடீரென வழிமறித்து வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். தகவல் அறிந்ததும் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிவண்ணனின் மகன்களான சுந்தர், வினோத் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 30.9.2020 அன்று முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மாந்தோப்பு சுந்தர் என்பவரை கொலை செய்ததும், அந்த கொலைக்கு பழிக்கு பழிவாங்கும் நோக்கில் மாந்தோப்பு சுந்தரின் தரப்பினர், மணிவண்ணனின் மகன்களான சுந்தர், வினோத் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்த நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டதால் ஆத்திரத்தில் மணிவண்ணனை மாந்தோப்பு சுந்தரின் தரப்பினர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

7 பேர் கைது

மேலும் மணிவண்ணனின் மனைவி வள்ளி, ஆரோவில் போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், மாந்தோப்பு சுந்தரின் மனைவி செல்வியின் (46) தூண்டுதலின்பேரில் அவரது தரப்பினர் தனது கணவரை கொலை செய்திருக்கலாம் என்று கூறியிருந்தார். அதன்பேரில் செல்வி, இவரது மகன் ஜோஷ்வா (20) உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக செல்வி, அவரது மகன் ஜோஷ்வா, புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்த பூபாலன் மகன் கரண் (21), விஜயன் மகன் அஜய்குமார் (22), ரமேஷ் மகன் டிராவிட் (21), புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் நரேஷ் (25), வில்லியனூரை சேர்ந்த கோபு மகன் கோகுல்நாதன் (24) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் கைதான அவர்கள் 7 பேரையும் வானூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்