கவர்னர் ரவி, அப்பர்பவானி அணையை கண்டு ரசித்தார்

கவர்னர் ரவி, அப்பர்பவானி அணையை கண்டு ரசித்தார்

Update: 2021-10-16 14:34 GMT
ஊட்டி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் சென்று அப்பர்பவானி அணையை கண்டு ரசித்தார்.

அப்பர்பவானி அணை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் வந்தார். அவர் ஊட்டி ராஜ்பவனில் தனது குடும்பத்தினருடன் தங்கி உள்ளார். 

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு ஊட்டி ராஜ்பவனில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு மஞ்சூர் வழியாக அப்பர்பவானி அணைக்கு சென்றார். 

அவருடன் மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் அப்பர் பவானி அணைக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர். அங்கு அவர், அணை பராமரிக்கப்படும் விதம், தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மின் உற்பத்தி செய்யப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

மின்உற்பத்தி

மலைப்பிரதேசமான நீலகிரியில் பெரிய அணையாக அப்பர்பவானி அணை உள்ளது. 210 அடி கொள்ளளவு கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 7,470 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. 

இங்கு தேக்கி வைக்கப்ப டும் தண்ணீர் திறக்கப்பட்டு அவலாஞ்சி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

குந்தா நீர்மின் திட்டத்தின் கீழ் அப்பர்பவானி அணை உள்ளது. அப்பர் பவானி அணையை பார்வையிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கு தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து அங்கு மதிய உணவு அருந்தினார். 

போலீஸ் பாதுகாப்பு

பின்னர் அப்பர்பவானியில் இருந்து புறப்பட்டு வரும் வழியில் காரில் இருந்தபடி கோரகுந்தா, தாய்சோலை ஆகிய பகுதிகளில் இருந்த தனியார் தேயிலை தோட்டங்களை பார்வையிட்டார். 

மாலை 6.15 மணியளவில் கவர்னர் மீண்டும் ஊட்டி ராஜ்பவனை வந்தடைந்தார். இதையொட்டி நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்