பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை வழிபாடு- நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி, அக்.17-
பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று திரளான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.
கடைசி சனிக்கிழமை
புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் குடும்பத்தில் சகல பாவங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கோவில்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்தது. இதனால் பெருமாள் கோவிலில் கடந்த 4 வாரமாக பக்தர்கள் இல்லாமல் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடந்தது.
வைகுண்டபதி பெருமாள் கோவில்
தற்போது கோவிலுக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் நேற்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி 5-வது சனிக்கிழமை வழிபாடு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி 5-வது சனிக்கிழமை வழிபாடு கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திரளான பக்தர்கள் தரிசனம்
பெருமாள் நேற்று குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். குருவாயூரப்பன் அலங்காரத்தில் பெருமாளை தரிசிப்பது குருவாயூருக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்வது போன்ற புண்ணியம் என்பதாலும், புரட்டாசி மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் பெருமாளை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.