நகை கடை பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
கொல்லங்கோடு அருகே கடையின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு அருகே கடையின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகை கடையில் கொள்ளை
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள அணுக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரைட் ராஜ். இவர் ஊரம்பு பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பிறகு கடையை பூட்டி விட்டு சென்றார்.
மறுநாள் காலையில் கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை அந்த பகுதியினர் பார்த்து பிரைட்ராஜிக்கு தகவல் கொடுத்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், பதற்றத்துடன் ஓடி வந்து கடையில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தார். அப்ேபாது 15 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.
முகமூடி கொள்ளையர்கள்
இதுகுறித்து பிரைட் ராஜ் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனே போலீசார் கொள்ளை நடந்த கடைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.கொள்ளை நடந்த கடையில் 5 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது. இதில் சில கேமராக்கள் உடைக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் காணப்பட்டன.
எனினும் மற்ற கண்காணிப்பு கேமராவில் கொள்ளை சம்பவ காட்சி பதிவாகியிருந்தது. அதாவது, முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
ஒரே கும்பல் கைவரிசையா?
நகை கடையில் திருடிய கொள்ளையர்கள், கண்காணிப்பு கேமராக்கள் எங்கெங்கு உள்ளன? என்று பார்வையிட்டனர். தடயங்கள் எதுவும் சிக்கி விடக்கூடாது என கருதி முதலில் கேமராக்களை உடைத்துள்ளனர். எனினும் அவர்களின் கண்களுக்கு தெரியாமல் வைக்கப்பட்டிருந்த கேமராவில் கொள்ளை சம்பவ காட்சி பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்திரவிளை பகுதியில் உள்ள 2 நகை கடைகளில் கொள்ளை நடந்தது. எனவே இந்த கொள்ளை சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
பரபரப்பு
இந்த துணிகர கொள்ளை குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். நித்திரவிளை, கொல்லங்கோடு பகுதிகளில் முகமூடி கொள்ளையர்கள் அடுத்தடுத்து கைவரிசை காட்டி வருவது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.