பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர் கைது
பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
உத்தரபிரதேசத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு நீதிக்கோரி நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் விவசாயிகள் முன்னணியில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்க கொண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மை அவர்களிடம் இருந்து பறித்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் இருந்த பா.ஜ.க.வினர் போராட்ட பகுதிக்கு திரண்டு வந்து உருவ பொம்மையை எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் பா.ஜ.க.வினரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சமாதானம் செய்தனர். அதனைத்தொடர்ந்து உருவ பொம்மை போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து போலீஸ் பஸ்சில் ஏற்றி சென்றனர்.