விவசாய சங்கத்தினர்-போலீசார் இடையே தள்ளு முள்ளு

மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிக்க முயற்சியால் விவசாய சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 4 பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-15 17:25 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிக்க முயற்சியால் விவசாய சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 4  பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊர்வலம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காரணமான மத்திய மந்திரியை பதவி நீக்கம் செய்யாததை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரியும் வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மை எரிப்பு போராட்டம் மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மாலை 5 மணி அளவில் காமராஜர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் விவசாய சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்களை கச்சேரி சாலையில் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம் பிரதமர் நரேந்திரமோடி உருவபொம்மை உள்ளதா? என சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் பிரதமர் உருவபொம்மை இல்லாததால் ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதித்தனர். 
பிரதமர் உருவப்படத்தை எரிக்க முயற்சி
போராட்டக்காரர்கள் கச்சேரி சாலை வழியாக பஸ் நிலையம் அருகே வந்தடைந்தனர். அப்போது போராட்டக்காரர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அந்த நேரத்தில் கச்சேரி சாலை வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் பிரதமர் நரேந்திரமோடி உருவபொம்மை இருப்பதை அறிந்த போலீசார் அதனை சுற்றி வளைத்தனர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது அந்த உருவபொம்மையை போலீசார் கைப்பற்றி போலீஸ் வாகனத்தில் பாதுகாப்பாக வைத்தனர். 
இதற்கிடையில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்வதாக கூறி பஸ்சில் ஏற வலியுறுத்தினர். ஆனால் சில பெண்கள் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர் மட்டும் பஸ்சிலும், போலீஸ் வாகனத்திலும் ஏறினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு பிரிவினர் பஸ்சை அந்த இடத்தைவிட்டு இயக்க விடாமல் சுற்றிவளைத்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால் போலீசாருக்கும், 
போராட்டக்காரர்களுக்கும் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் மோடியின் உருவப்படத்தை எடுத்து எரிக்க முயற்சித்தனர். அதனையும் போலீசார் பறித்துச் சென்றனர். 
80 பேர் கைது
அதன் பிறகு அனைவரையும் கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், இயற்கை விவசாயி ராமலிங்கம் மற்றும் 4 பெண்கள் உட்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர். 
மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே நடந்த இந்த போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல போராட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இடும்பையன் தலைமையில் வந்த அக்கட்சியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. நிர்வாகிகள் அகோரம், மோடிகண்ணன் உட்பட சிலர் கண்ணாரத் தெரு முக்கூட்டில் கூடினர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் நேற்று மயிலாடுதுறை நகரின் முக்கிய பகுதிகள் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்