கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல்:
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நிக்கோலஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலுபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் உத்தரபிரதேசத்தில் காரை ஏற்றி 8 விவசாயிகளை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய மந்திரி தோமரை பதவி நீக்கம் செய்வதுடன், அவரை கைது செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, தோமர், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவ படங்களை விவசாய சங்கத்தினர் எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து, 4 பேரின் உருவ படங்களையும் கைப்பற்றினர். இதற்கிடையே மத்திய அரசை கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை விவசாயிகள் சங்கத்தினர் தீ வைத்து எரித்தனர். பின்னர் அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.