சிவன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
தூத்துக்குடி சிவன் கோவிலில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிவன் கோவிலில் குழந்தைளுக்கு முதல் கல்வி கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வித்யாரம்பம்
சரசுவதி பூஜை, ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமி ஆகும். இந்த நாளில் குழந்தை பருவத்தில் வித்தைகளை கற்றுக் கொள்ள தொடங்கினால் சிறப்பாக அமையும் என்று கருதப்படுகிறது. இதையொட்டி விஜயதசமி நாளான நேற்று தூத்துக்குடியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
சங்கரராமேசுவரர் கோவில்
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் உள்ள சரசுவதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இங்கு கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து தட்டில் பரப்பி வைக்கப்பட்ட அரிசியில் கடவுள் வழிபாடு எழுத்து, தமிழ் எழுத்துக்கள் உள்ளிட்டவை குழந்தையின் கையை பிடித்து எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் காலை முதல் ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
அதே போன்று பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடந்தன.