பழனி அருகே விவசாயி கொலை வழக்கில் மனைவி உள்பட 3 பேர் கைது

பழனி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-15 12:38 GMT
பழனி:
பழனி அருகே உள்ள பெருமாள்புதூரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி மீனாட்சி (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு மீனாட்சி தனது குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு கருப்புசாமி தனது வீட்டருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 
கொலை
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பழனி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கருப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
கருப்புசாமி சொந்தமாக விவசாய நிலம் இருந்தது. இ்தை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து கொண்டு கருப்புசாமி மது குடித்துவிட்டு மீனாட்சியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மீனாட்சி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 12-ந்தேதி இரவு மீனாட்சி, அவரது அண்ணன் வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டக்காம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (59), தங்கை மகன் செம்பட்டியை சேர்ந்த சக்திசிவன் (25) ஆகியோர் கருப்புசாமியிடம் பேசியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கருப்புசாமியை மீனாட்சி உள்பட அனைவரும் சேர்ந்து தாக்கினர். இதில் காயமடைந்த கருப்புசாமி பரிதாபமாக இறந்து போனார். இவ்வாறு தகவல்கள் வெளியாகின. 
கைது
இதையடுத்து போலீசார், மீனாட்சி உள்பட 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில் ராஜேந்திரன் அரசு போக்குவரத்துக்கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். சக்திசிவன், போலீஸ் பணிக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்