நாட்டு மாடுகளுடன் தேனி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்களில் குடிநீர் கொண்டு செல்வதற்கான புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி:
லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்களில் குடிநீர் கொண்டு செல்வதற்கான புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்துக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்கங்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாயிகள் வந்தனர். லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் செல்வக்குமார், தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ராஜன், முல்லைப்பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்க தலைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி, தமிழக தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சிலர் நாட்டு மாடுகளை கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதுரைக்கான புதிய குடிநீர் திட்டத்தால் தேனி மாவட்ட விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பாதிக்கப்படும் என்றும், இந்த திட்டத்தை லோயர்கேம்ப்பில் இருந்து செயல்படுத்தாமல் வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இதேபோல் இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும். அரசு மாணவர் விடுதிகளில் உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லும் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். புறநகர் பஸ்களிலும் மாணவர்கள் பயணம் செய்ய இலவச பஸ் பயண அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.