முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-10-11 16:52 GMT
கூடலூர்:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
தொடர் மழை
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகள் உள்ளன. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 7-ந்தேதி அணையின் நீர்மட்டம் 128 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1,309 கனஅடியாகவும் இருந்தது. 
தற்போது தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி, அணையின் நீர்மட்டம் நேற்று 129 அடியாக உயர்ந்தது. மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,561 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
இதேபோல் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 56.17 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,144 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 719 கனஅடியாகவும் இருந்தது. 
இதற்கிடையே நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெரியாறு அணை பகுதியில் 4.2 மில்லிமீட்டர் மழையும், தேக்கடியில் 2.5 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்