தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்
தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்
ஊட்டி
தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அவர்கள் கூட்டம் கூடாமல் இருக்கவும், சமூக இடைவெளி யை கடைபிடித்து நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.
ஒவ்வொருவரிடம் இருந்தும் மனுக்கள் பெறப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது. பொதுமக்கள் காத்திருந்து மனுக்களை அளித்து சென்றனர். மொத்தம் 187 மனுக்கள்
பெறப்பட்டன.
11 பேருக்கு உதவி
அதை பரிசீலனை செய்து, அழிவின் விழிம்பு நிலையில் உள்ள பண்டைய பழங்குடியின ருக்கான திட்டத்தின்கீழ், 9 பழங்குடியின பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் மதிப்பிலான தேனீ வளர்ப்புபெட்டி, 2 பயனாளிகளுக்கு மாதந் தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை உள்பட மொத்தம் 11 பயனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட்திவ்யா வழங்கினார்.
ஊட்டி அருகே முள்ளிகூர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் கலெக்டரி டம் அளித்த மனுவில், நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக முள்ளிகூர் ஊராட்சியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
கொரோனா தொற்று காலத்திலும் பணியில் ஈடுபட்டோம். இந்த நிலையில் திடீரென்று பணியில் இருந்து நீக்கி விட்டனர். தற்போது வேலை இல்லாததால் வருமானம் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம்.
எனவே, எங்களுக்கு மீண்டும் நாங்கள் பணி வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
வீட்டுமனைப்பட்டா
மேலும் குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.
அதேபோல் ஊட்டி நகராட்சி அலுவலகத்திலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.