கோவில்பட்டியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலத் துணைத் தலைவர் மே.மரகதலிங்கம் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட தலைவர் பி.சத்தியமூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் கே.வெங்கடேசன், செயல் தலைவர் மாரிமுத்து, மாவட்ட பிரச்சார செயலாளர் ஜி. மாரிமுத்து, தென்காசி மாவட்ட தலைவர் கண்ணன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஒரகடம் பகுதி டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் படுகொலை செய்யப்பட்டதையும், விற்பனையாளர் ராமு படுகாயமடைந்ததையும் கண்டிப்பது, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் ஈச்சம்பாக்கம் பகுதி விற்பனையாளர் கோபியை கத்தியால் குத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். இறந்த பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சமும், வாரிசு வேலை வழங்க வேண்டும். படுகாயமடைந்த பணியாளருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் முருகானந்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மதுரை மண்டலத்தை சேர்ந்த அனைத்து சங்க டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.