தாராபுரம் அருகே இரும்பு ஆலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
தாராபுரம் அருகே இரும்பு ஆலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர்
தாராபுரம் அருகே இரும்பு ஆலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
இரும்பு ஆலைக்கு எதிர்ப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு 1089 மனுக்கள் கொடுக்கப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தாராபுரம் அருகே கொழுமங்குளி, சங்கரண்டாம்பாளையம், வடுகபாளையம், சிறுகிணர், கண்ணாங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ளவர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளோம். ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, தென்னந்தோப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்தநிலையில் வடுகபாளையம் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் இரும்பு ஆலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த ஆலை அமைப்பதற்கு மக்களுக்கு முறையான அறிவிப்பு செய்து அவர்களின் கருத்துக்களை கேட்டறியவில்லை. கருத்து கேட்பு கூட்டம் நடத்தாலும் தனியார் நிறுவன ஆலைக்கு சாதமாக செயல்பட்டுள்ளனர். இரும்பு ஆலை அமையும்போது வெளியேறும் புகை மற்றும் துகள்களால் விவசாயம் பாதிக்கப்படும். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கும் வாய்ப்புள்ளது. எனவே இரும்பு ஆலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
வீட்டுமனைப்பட்டா
சிவசேனா மாநில செயலாளர் சுந்தரவடிவேலன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், காங்கேயம் தாலுகா பரஞ்சேர்வழி, நத்தக்காடையூர், மருதுரை போன்ற கிராமங்களில் தேங்காய் நார் கழிவு, தேங்காய் நார் சோற்றுகட்டி, தேங்காய் நாறு சோறு ஆகியவை தயாரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பற்ற முறையில் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், விதிமுறைகளுக்கும் முரணாக இயங்கி வருகிறது. இதன்காரணமாக பொதுமக்களுக்கும், கால்நடைககளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. தேங்காய் நார் கழிவு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சாமளாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், நாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி 22 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அதிதிராவிட சமூகத்தை சேர்ந்த நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்தோம். கடந்த 2008ம் ஆண்டு அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்தார்கள். சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். சாமளாபுரம்-சோமனூர் இடையே நொய்யல் பாலம் கட்டி முடித்ததும் சாலை போக்குவரத்துக்கு தேவையான நிலம் போக மீதம் உள்ள இடத்தில் குடியிருக்க தடையின்மை சான்று வழங்கப்படும் என்றார்கள். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு
உடுமலை செல்லப்பம்பாளைம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், பாலாற்றில் கூட்டு குடிநீர் திட்டத்தில் கிணறு வெட்டப்பட்டுள்ளது. ஆனால் 65 அடி வெட்ட வேண்டிய கிணறு, 20 அடியில் வெட்டப்பட்டுள்ளது. முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்தினால் ஊராட்சியின் பணிகள், நிதி முறைகேடுகள் அறிய வாய்ப்பாக அமையும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திருப்பூரை அடுத்த பொல்லிகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், அலகுமலை கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வாழ்வாதாரத்துக்காக 14.79 ஏக்கர் பஞ்சமி நிலம் அரசால் வழங்கப்பட்டு விவசாயம் செய்து வந்தனர். இந்தநிலையில் தனியார் 2 பேர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்து பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், வீரபாண்டி காளிகுமாரசாமி கோவிலில் இருந்து கோவில்வழி வரை இணைக்கும் சாலையும், கோவில்வழியில் இருந்து நல்லூர் வரை இணைக்கும் சாலையும் நெடுஞ்சாலை ஆக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை ஆக்கப்படவில்லை. சாலையும் மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்றுகூறியுள்ளனர்.
------------
குறிப்பு படம் உண்டு.
இரும்பாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.
பஞ்சமி நில ஆக்கிரமிப்பை கண்டித்து மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
----
Reporter : M.Sivaraj_Staff Reporter Location : Tirupur - Tirupur