எழும்பூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே மழைநீர் தேங்காமல் இருக்க புதிய ராட்சத குழாய்கள் பதிப்பு
சென்னை மாநகரில் மழை காலங்களில் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய் சிறியதாக இருப்பதால் மழை தண்ணீர் வேகமாக செல்ல முடியாத நிலை இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த குழாயை போதுமான ஆழத்தில் பதிப்பதுடன், பெரிய அளவிலான குழாய் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சென்டிரலில் இருந்து எழும்பூர் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்திவிட்டு கடந்த 3 நாட்களாக ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இரும்பு குழாய்களை மாற்றி பெரிய அளவிலான புதிய குழாய்களை ஆழத்தில் பதிக்கப்பட்டன. அத்துடன், கமிஷனர் அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கூவம் ஆற்றில் சென்று கலக்கும் வகையில் புதிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இந்த பணியில் 3 பொக்லைன் எந்திரங்கள், 3 ராட்சத பம்பு செட்டுகள் மற்றும் 25 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்தபணி நிறைவு பெற்றதும் அந்த சாலை போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும். வரும் காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்க வாய்ப்பு இல்லை என்று சென்னை குடிநீர் வாாிய அதிகாரிகள் தெரிவித்தனர்.