சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை- சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்:
சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெப்பச்சலனம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி சேலத்தில் நேற்று மதியம் வெயில் அடித்தது. பின்னர் மாலை 5 மணி அளவில் மேக மூட்டம் காணப்பட்டது.
சிறிது நேரத்தில் மழை தூறல் விழுந்தது. சுமார் 30 நிமிடம் இதே நிலை நீடித்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் லேசான மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டியது. இரவு வரை தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.
குடியிருப்பில் மழை நீர் புகுந்தது
இதனால் பழைய பஸ் நிலையம், 4 ரோடு, மெய்யனூர், அழகாபுரம், அன்னதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நாராயணநகர் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பில் மழை நீர் புகுந்தது.
மேலும் பல இடங்களில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து சென்றது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் நேற்று இரவு மிகவும் அவதிப்பட்டனர். இந்த மழையினால் நேற்று இரவு மாநகர் பகுதியில் குளிர்காற்று வீசியது.