நவீன பெண்கள் குழந்தை பெற்றெடுக்க விரும்புவது இல்லை - மந்திரி சுதாகர்
நவீன பெண்கள் குழந்தை பெற்றுகொள்ள விரும்பவதில்லை என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற உலக மனநல சுகாதார நாள் விழாவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியாவின் நவீன பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவது இல்லை. ஒருவேளை திருமணம் செய்தாலும் குழந்தை பெற்றெடுக்க விரும்புவது இல்லை. வாடகை தாய் மூலம் குழந்தை பெற விரும்புகிறார்கள். இது சரியல்ல. மேற்கத்திய கலாசாரம் நமது நாட்டில் பரவுகிறது. நமது தாத்தா-பாட்டிகள் நம்முடன் வைத்து கொள்வதை மறந்துவிட்டோம்.
மன அழுத்தத்தை கையாள்வது ஒரு கலை. இதை நாம் (இந்தியர்) கற்க வேண்டியது இல்லை. இதுகுறித்து நாம் தான் மற்ற நாடுகளுக்கு கற்பிக்க வேண்டும். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் யோகா, தியானம், பிரானயாமா முக்கியமான பயிற்சிகளை நமக்கு கற்று கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை குடும்பத்தினர், உறவினர்கள் கூட தொட மறுத்தனர். ஏனென்றால் மனநிலை தான் அதற்கு காரணம்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் மாதத்திற்கு 1½ கோடி டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குகிறது. இதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு சுதாகர் பேசினார்.