களக்காட்டில் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மைக்கேல்ராஜ் (வயது 40). இவர் நேற்று மாலை களக்காடு-நாங்குநேரி ரோட்டில் நாங்குநேரி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாட்டபிள்ளை மதகு அருகே வந்த போது, எதிரே களக்காடு கோவில்பத்தை சேர்ந்த பிலிப் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளிலும், மைக்கேல்ராஜ் சென்ற மோட்டார்சைக்கிளிலும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மைக்கேல்ராஜ் சரிந்து, சாலையில் விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதில் மைக்கேல்ராஜ் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தார்.
இதேபோல் பிலிப், அவரது மகன் பில்தாஸ் (11) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த களக்காடு போலீசார் மைக்கேல்ராஜை ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிலிப், அவரது மகன் பில்தாஸ் ஆகியோர் களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மைக்கேல்ராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதி குறுகிய வளைவாக இருப்பதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.