பறிக்காமல் விடப்பட்ட புடலங்காய்
விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் புடலங்காய் பறிக்காமல் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
தாயில்பட்டி,
விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் புடலங்காய் பறிக்காமல் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
புடலங்காய்
வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி, தெற்கு ஆணைகூட்டம், ஏழாயிரம்பண்ணை, செவல்பட்டி, துரைச்சாமிபுரம், பனையடிபட்டி, கண்டியாபுரம் லட்சுமியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புடலங்காய் அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்த பகுதியில் விளைச்சல் இருந்தும், விலை இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
வெம்பக்கோட்ைட ஒன்றிய பகுதிகளில் புடலங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நல்ல விளைச்சல்
புடலங்காய் விதைக்கப்பட்டு முறையாக உரமிட்டு நன்கு கண்காணிக்கப்படுகிறது. 55 நாட்களுக்கு பிறகு கொடியில் முழுமையான காய்கள் கிடைக்கிறது. விளைச்சல் நன்றாக உள்ளது.
கொடியில் 2 மாதங்கள் வரை காய்கள் கிடைக்கும். அதனை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த மாதம் வரை புடலங்காய் கிலோ ரூ. 20 முதல் ரூ.30 வரை விற்பனை ஆனது. இங்குள்ள காய்கள் சாத்தூர், சிவகாசி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
விவசாயிகள் வேதனை
தற்போது புடலங்காய் கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். களையெடுத்தல், உரமிடுதல், பறிப்பு கூலி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலி கூட கையில் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் வேதனையில் புடலங்காய்களை கொடியிலே பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
சென்ற ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காமல் புடலங்காய் கொடியில் வீணாகி வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.