கந்துவட்டி கொடுமையால் தனியார் வங்கி காவலாளி தற்கொலை

ஊத்துக்குளி அருகே கந்துவட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்து விட்டு தனியார் வங்கி காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-10 18:10 GMT
ஊத்துக்குளி
ஊத்துக்குளி அருகே கந்துவட்டி கொடுமையால் கடிதம் எழுதி  வைத்து விட்டு தனியார் வங்கி காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காவலாளி
ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன்பாளையம் ஆலங்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 60). இவர் பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பல்லகவுண்டம்பாளையத்தில் இருந்து சாமியார்பாளையம் செல்லும் வழியில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்புசாமியின் உடலை மீட்டனர். அப்போது அவருடைய சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில்  கருப்புசாமி ஒரு வருடங்களுக்கு முன்பாக கூனம்பட்டி ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரிடம்  ரூ.35 ஆயிரம் கடனாக பெற்று இருந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பாக ரூ.24 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
கடன் தொல்லை
இந்நிலையில் கணேசன் ரூ.1 லட்சம் தர வேண்டும் என கூறி வருவதாகவும், எனது சாதியின் பெயரை சொல்லி அவமானப்படுத்தி தகாத வார்த்தையில் திட்டிய காரணமாக மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கருப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்து வட்டி கொடுமை  காரணமாக கருப்புசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்