கொரோனா தடுப்பூசி செலுத்தாத பணியாளர்கள் உள்ளனரா?; கடைகளில் கலெக்டர் விசாரணை
கொரோனா தடுப்பூசி செலுத்தாத பணியாளர்கள் கடைகளில் உள்ளனரா? என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விசாரணை நடத்தினர்.
சோளிங்கர்
தமிழகம் முழுவதும் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. ராணி்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பல்வேறு பகுதிகளில் நடந்த முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் சோளிங்கருக்கு அவர் வந்தார். பஸ் நிலையத்துக்குள் சென்ற அவர் அங்குள்ள கடைகளில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உள்ளனரா என நேரில் விசாரணை நடத்தினார்.
பூக்கடை, இனிப்பு கடை, மருந்தகம், பழக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் விசாரித்த அவர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்ள அறிவுரை வழங்கினார்.
பின்னர் சோளிங்கர் பேரூராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கும் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார் அப்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையமான எத்திராஜம்மாள் முதலியார் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தாசில்தார் வெற்றிகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி, இளநிலை உதவியாளர் எபினேசர், துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.