ரூ.80 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

Update: 2021-10-10 16:03 GMT
திண்டுக்கல்: 


ஆக்சிஜன் உற்பத்தி மையம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் ரூ.80 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் நிமிடத்துக்கு 600 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் ஆக்சிஜன் உற்பத்தி மையம் செயல்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார், கலெக்டர் விசாகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அரசு மருத்துவமனை தற்காலிக செவிலியர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கொரோனா காலத்தில் 90 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.

நடமாடும் மருத்துவ முகாம்
இவர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி செய்தனர். ஆனால் தற்போது அவர்களில் 30 பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. எனவே தற்காலிக செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்ற அமைச்சர், டிசம்பர் 31-ந்தேதி வரை தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு நடமாடும் மருத்துவ முகாம்களில் அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். அதன் பின்னர் அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

பெண்ணுக்கு டி.வி. பரிசு 
முன்னதாக சின்னாளப்பட்டியில் மெகா தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார். 
முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட விஜயலட்சுமி என்பவருக்கு அமைச்சர் டி.வி.யை பரிசாக வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. காந்திராஜன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், சின்னாளப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, ஊராட்சி தலைவர்கள் கருப்பையா (தொப்பம்பட்டி), ஆறுமுகம் (ஆலமரத்துப்பட்டி), ராஜா (செட்டியப்பட்டி) சேகர் (அம்பாத்துரை), உலகநாதன் (பிள்ளையார்நத்தம்), பாப்பாத்தியம்மாள் (பஞ்சம்பட்டி), ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்