தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-10-10 14:57 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள்தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி:
பயணிகள் நிழற்கூடம் புதுப்பிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்தவர் உடையார். இவர் அங்குள்ள போப் கல்லூரி அருகில் உள்ள பயணிகள் நிழற்கூடம் பழுதடைந்து, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதாகவும், இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதாகவும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது.
இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்கூடத்தை சரிசெய்து புதுப்பித்து உள்ளனர். நடவடிக்கை எடுப்பதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

சீரான குடிநீர் வினியோகம் 

பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள நீச்சல்குளம் தெரு, மேரிஸ் தெரு, ஜோசப் தெருக்களில் கடந்த 2 மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தினமும் லாரிகளில் வரும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அங்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- ஜான்கிட், பெருமாள்புரம்.

குண்டும், குழியுமான சாலை 

அம்பை தாலுகா கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணிமுத்தாறு செல்லும் சாலை ரெயில்வே கேட் அருகே சுமார் 100 மீட்டர் அளவுக்கு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையானது மாஞ்சோலை, மணிமுத்தாறு அணை செல்லும் பிரதான சாலையாக உள்ளதால் இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வைரமுத்து, கல்லிடைக்குறிச்சி.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் திருக்குமரன். இவர் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் 1 முதல் 6-வது தெரு வரை உள்ள பிரதான சாலையில் மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதிக்கு அனுப்பிய பதிவு கடந்த 8-ந் தேதி செய்தியாக பிரசுரமானது.
இதன் எதிரொலியாக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அந்த மின்விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

தென்காசி பழைய பஸ் நிலையத்தில் இருந்து வடகரைக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் அரசு பஸ்கள் மூலம் பயணம் செய்கிறார்கள். ஆனால் மாலை 6 மணி முதல் இரவு 7 மணிவரையும் தென்காசி பழைய பஸ் நிலையத்தில் இருந்து வடகரைக்கு பஸ் வசதி இல்லை. 7 மணிக்கு பிறகு வரும் பஸ்களில் பயணிகள் வாசல் படிகளில் நின்று ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். எனவே இந்த இடைப்பட்ட நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கினால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். 
- ராமசுப்பிரமணியன், வடகரை.  

பூங்கா சீரமைக்கப்படுமா?

தென்காசி மாவட்டம் களப்பாகுளம் பஞ்சாயத்து என்.ஜி.ஓ. காலனியில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பின்றி முட்செடிகள் வளர்ந்து காட்சி அளிக்கிறது. மேலும் அங்குள்ள மழைநீர் செல்லும் ஓடை தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பூங்காவை சீரமைக்கவும், கழிவுநீர் ஓடையை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- முத்துப்பாண்டி, என்.ஜி.ஓ. காலனி.

ரேஷன் கடையை திறக்க வேண்டும்

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் மூன்று மடை ஓடையில் இருந்து தெற்கு ஊருணி வரை உள்ள கால்வாயில் முட்புதர்கள், சாக்கடை, பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் அடைப்பு ஏற்படுவதால், அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் உண்டாகிறது. இதேபோல் பெரியகிராமத்தில் ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது, அங்கு ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அது இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே அதை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- கணேசன், கீழக்கலங்கல்.

ஆபத்தான பாலம்

மேலப்பாவூர்  மீனாட்சி அம்மன் கோவில் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்வாய் பாலம் உள்ளது. இந்த வழியாக தான் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்கிறார்கள். மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இந்த வழியாக தான் பொதுமக்கள் செல்கிறார்கள். இந்த பாலம் உடைந்து, ஆங்காங்கே பெயர்ந்து ஒருபுறம் தடுப்புச்சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காலமும் தொடங்க இருப்பதால், பொதுமக்கள் நலன் கருதி இந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- தினேஷ்வேல், மேலப்பாவூர்.

சாலை வசதி தேவை

தூத்துக்குடி அய்யர்விளை 10-வது வார்டில் உள்ள அனைத்து தெருவிலும் சுமார் 10 ஆண்டுகளாக சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இங்கு சாலை வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- பழனி, அய்யர்விளை.

மேலும் செய்திகள்