மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாட்களில், 2½ அடி உயர்வு

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் 2½ அடி உயர்ந்துள்ளது.

Update: 2021-10-09 22:38 GMT
மேட்டூர்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் 2½ அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை நீடிக்கிறது.
கடந்த 2 நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த 7-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 168 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 15 ஆயிரத்து 19 கனஅடியாக அதிகரித்தது. 
2½ அடி உயர்வு
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 17 ஆயிரத்து 665 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 1,750 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைக்கப்பட்டது.
அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. 
கடந்த 7-ந் தேதி காலை 76.48 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 79.07 அடியாக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2½ அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்