விறுவிறுப்பான வாக்குப்பதிவு

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Update: 2021-10-09 22:31 GMT
நெல்லை:
நெல்லை, தென்காசி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2 ஆயிரத்து 91 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 22 ஆயிரத்து 581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. மேற்சொன்ன 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 13 ஆயிரத்து 662 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 
2-ம் கட்ட தேர்தல்
அதன் தொடர்ச்சியாக 2-வது கட்ட தேர்தல் 9 மாவட்டங்களில் மீதம் இருக்கும் 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 கிராம ஊராட்சி தலைவர், 10 ஆயிரத்து 329 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 341 பதவிகளுக்கு நேற்று நடந்தது.
9 மாவட்டங்களில் 2-வது கட்ட தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிப்பதற்கு ஏதுவாக 6 ஆயிரத்து 652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய 4 ஒன்றியங்களில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை நடைபெற்றது.
இந்த தேர்தலுக்காக 567 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறிப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக ஓட்டுப்ெபட்டிகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமாக 4 ஓட்டுகளை போட்டுச் சென்றனர். இளைஞர், இளம்பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனா். முதியவர்களை குடும்பத்தினர் வாகனங்களில் அழைத்து வந்தும், தூக்கிச்சென்றும் வாக்களிக்க வைத்தனர்.
மூன்றடைப்பு சி.எம்.எஸ். இவாஞ்சலிகல் ஆரம்ப பள்ளி, மறுகால்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, படலையர்குளம் அங்கன்வாடி மையம், பத்மநேரி அரசு உயர்நிலைப்பள்ளி, பத்மநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மருதகுளம் ரோசலின்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் கிராம மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கிராம பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு திருவிழா போல் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏராளமான பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்து வாக்களித்தனர். இறுதி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 69.34 சதவீதம் வாக்குகள் பதிவானது.
கையுறை வழங்கல்
மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.  அதன்படி,  வாக்குச்சாவடிக்கு வரும்   வாக்காளர்கள் கண்டிப்பாக   முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனை போலீசார் மற்றும் தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்கள் கண்காணித்தனர். மேலும், வாக்களிக்க வந்த அனைத்து வாக்காளர்களுக்கும் தலா ஒரு கையுறை வழங்கப்பட்டது. முன்னதாக அவர்கள் கைகளை சுத்தம் செய்து கொள்ளும் வகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
மேலும், பல்வேறு வாக்குச்சாவடிகளில் நெல்லை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன், கலெக்டர் விஷ்ணு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வசதியாக நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதற்கு வசதியாக நேற்றும், நேற்று முன்தினமும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர தேர்தல் நடைபெறும் 4 ஒன்றிய பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் மற்ற பகுதிகளில் திறந்திருந்த கடைகளுக்கு படையெடுத்து சென்றனர்.
தென்காசி
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்ைட, தென்காசி, குருவிகுளம் ஆகிய யூனியன் பகுதிகளிலும் நேற்று 2-வது கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்காக 574 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 131 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏராளமான கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து 4 ஓட்டுகளை போட்டுச் சென்றனர். 
செங்கோட்டை பகுதியில் நேற்று காலையில் லேசான மழை பெய்தது. இதனால் குடைபிடித்தபடி வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டுச் சென்றனர். தென்காசி மாவட்டத்தில் மாலை 3 மணி வரை 57.62 சதவீதம் வாக்குகள் பதிவானது.
மேலும் வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் சங்கர், கலெக்டர் ேகாபால சுந்தரராஜ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
டோக்கன் வினியோகம்
இந்த மாவட்டங்களில் ஒருவர் 4 ஓட்டுகள் போட வேண்டி இருந்ததால் வாக்குப்பதிவு சிறிது தாமதம் ஏற்பட்டது.
இதனால் மாலை 6 மணிக்கு பிறகும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் காத்திருந்தனர். அப்போது அவர்களுக்கு வரிசையின் கடைசி நபரிடம் இருந்து டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. அவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் கொரோனா நோயாளிகள், அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டுப்பெட்டிக்கு சீல்வைப்பு
வாக்குப்பதிவு முடிந்த உடன் ஓட்டுப்பெட்டிகள் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மண்டல அலுவலர்கள் தலைமையில் வாகனங்களில் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது.
.........

மேலும் செய்திகள்