ஏ.சி. எந்திரம் வெடித்து மனைவியுடன் தொழில் அதிபர் கருகி சாவு

ஏ.சி. எந்திரம் வெடித்து தீப்பிடித்ததில் மனைவியுடன் தொழில் அதிபர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவர்களுடைய மகள், மகன் தப்பினர்.

Update: 2021-10-09 21:01 GMT
மதுரை, 

ஏ.சி. எந்திரம் வெடித்து தீப்பிடித்ததில் மனைவியுடன் தொழில் அதிபர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவர்களுடைய மகள், மகன் தப்பினர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சோப் கம்பெனி அதிபர்

மதுரை ஆனையூர் எஸ்.வி.பி.நகர் பகுதியில் குமரன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சக்திகண்ணன் (வயது 43), சோப் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். இவருடைய மனைவி சுபா (38).
இவர்களுடைய மகள் காவியா (18). இவர் விருதுநகரில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். மகன் கார்த்திகேயன் (14). இவர் 10-ம் வகுப்பு மாணவர்.
சக்தி கண்ணனின் சொந்த ஊர் விருதுநகர். ஆனால், இவர் குடும்பத்தினருடன் மதுரையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் சக்திகண்ணன், அவருடைய மனைவி, பிள்ளைகள் முதல் மாடியில் உள்ள ஏ.சி. அறையில் தூங்கியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் அறையில் குளிர் அதிகமாக இருந்ததால் மகளும், மகனும் மட்டும் கீழ் தளத்தில் உள்ள அறைக்கு வந்துள்ளனர்.

ஏ.சி. எந்திரத்தில் மின்கசிவு

அதிகாலை 4 மணி அளவில் சக்திகண்ணன் தூங்கி கொண்டிருந்த அறையில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை வந்தது. இதனால் அவர் எழுந்து பார்த்த போது அறை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. உடனே அவர் மனைவியை எழுப்பியுள்ளார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. பின்னர் சக்திகண்ணன் குளியலறையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஏ.சி. எந்திரத்தின் மீது ஊற்றியதாக தெரிகிறது. அதில் ஏ.சி. எந்திரம் வெடித்து சிதறி அறையில் தீப்பற்றியது. எனவே அங்கிருந்து மனைவியுடன் அவர் தப்பி செல்ல முயன்றார்,
கணவன்-மனைவி பலி
அவருடைய மனைவி புகையினால் மயங்கிவிட்டதாக கூறப்படுகிறது.  மனைவியை காப்பாற்ற முயன்ற போது, அவரும் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. சற்று நேரத்தில் அறை முழுவதும் தீ பரவி கணவன்-மனைவி மீதும் தீப்பற்றியது.
இதற்கிடையில் கீழே உள்ள அறையில் படுத்திருந்த மகள் காவியா, வீடு முழுவதும் புகை பரவி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தம்பியை எழுப்பி வெளியே வந்து பார்த்த போது, வீட்டில் தீ விபத்து நடந்திருப்பதை கண்டனர். உடனே அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தல்லாகுளம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டில் தீயை அணைத்தனர்.
அதன்பின்னர் தீயணைப்பு துறையினர் மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது அங்கு சக்திகண்ணனும், அவருைடய மனைவி சுபாவும் உடல் கருகி பிணமாக கிடந்ததை கண்டனர். பின்னர் அவர்களது உடல்களை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் தாய், தந்தையை பறிகொடுத்த காவியாவும், கார்த்திகேயனும் கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது. அவர்களை அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் அவர்களை தேற்றி, அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மின்கசிவால் விபத்து

இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறும் போது, “வீட்டில் மின் ஒயர் எரிந்து, ஏ.சி. எந்திரத்தை பாதித்துள்ளது. அதனால் புகை அதிகமாக வெளியேறி இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது,” என்று தெரிவித்தனர்.
ஏ.சி. எந்திரம் வெடித்து கணவன்-மனைவி உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்