மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த 25 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த 25 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
விருதுநகர் மாவட்டத்தில் காலியாக இருந்த 54 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 54 இடங்களுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 29 இடங்களுக்கு போட்டியின்றி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 25 இடங்களுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு 162 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. 772 அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப் பட்டிருந்தனர். காலை 9 மணி அளவில் 16.8 சதவீதமும், 11 மணி அளவில் 37.53 சதவீதமும், மதியம் 1 மணி அளவில் 43.79 சதவீதமும், மதியம் 3 மணி அளவில் 52.05சதவீமும்் வாக்குப்பதிவாகியிருந்தது.
61 சதவீதம்
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றநிலையில் சில இடங்களில் 6 மணிக்குள் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இறுதியாக 162 வாக்குச்சாவடிகளிலும் 23,780 ஆண் வாக்காளர்களும், 26, 830 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 50 ஆயிரத்து 610 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி வாக்குப்பதிவு 61 சதவீதம் ஆகும். அதிகபட்சமாக நரிக்குடி யூனியனில் 84 சதவீதமும், குறைந்தபட்சமாக சிவகாசி யூனியனில் 51.71 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை
தேர்தல் நடைபெற்ற 25 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந்் தேதி நடைபெறுகிறது. 1 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், 3 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை 3 கல்வி நிறுவனங்களிலும், 4 கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் 17 கிராம பஞ்சாயத்துவார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த பஞ்சாயத்து யூனியன்அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
போலீஸ் பாதுகாப்பு
சாத்தூர் யூனியனில் உள்ள யூனியன் வார்டுகளுக்கு சாத்தூர் எஸ்.ஹெச்.என். எட்வர்டு மேல்நிலைப் பள்ளியிலும், ராஜபாளையம் பகுதியில் உள்ள யூனியன் வார்டுகளுக்கு தளவாய்புரம் பி.ஏ. மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியிலும், விருதுநகர் யூனியன் வார்டுக்கு செந்திக் குமார் நாடார் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. அனைத்து பகுதிகளிலும் போலீசார் உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 34 பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவினை தேர்தல் பார்வையாளர் டாக்டர் கருணாகரன், மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் திட்ட இயக்குனர் திலகவதி ஆகியோர் பார்வையிட்டனர்.
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரி ராமமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனர்.