நாமக்கல்லில் டேங்கர் லாரி வெடித்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலி
நாமக்கல் அருகே முதலைப்பட்டியில் பணியின்போது டேங்கர் லாரி வெடித்ததில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல்:
டேங்கர் லாரி வெடித்தது
நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டிபுதூரில் வசித்து வந்தவர் பெரியசாமி (வயது 38). இவருக்கு திருமணமாகி பானுபிரியா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.
நேற்று மாலை 5.30 மணி அளவில் பெரியசாமி டேங்கர் லாரி ஒன்றில் இருந்த டேங்கின் கீழ் பகுதியில் வால்வை பொருத்த வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லாரி டேங்க் வெடித்தது. இதில் லாரியின் டேங்கர் உருக்குலைந்தது.
உடல் சிதறி பலி
லாரி வெடித்ததில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். டேங்கர் வெடித்த சத்தம் கேட்டு ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம்
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, வெடித்து சிதறிய லாரி டீசல் லோடு ஏற்றி செல்லும் டேங்கர் லாரி என்பதும், டேங்கரில் இருந்த வால்வு பிரச்சினையை சரி செய்ய வெல்டிங் வைத்தபோது வெடித்து சிதறியதும் தெரியவந்தது.
மேலும், லாரி டேங்கரில் இருந்த டீசலை அகற்றிவிட்டு அதனை தண்ணீர் மூலம் சரியாக சுத்தப்படுத்தாததும், வால்வை திறந்து வைக்காமல், பூட்டிய நிலையிலேயே வெல்டிங் வைத்ததும் தான் விபத்துக்கான காரணம் என தெரிந்தது.
நாமக்கல் அருகே வெல்டிங் வைத்தபோது டேங்கர் லாரி வெடித்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் உடல் சிதறி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.