தொப்பையாறு அணையில் மூழ்கி பொக்லைன் ஆபரேட்டர் சாவு

தொப்பையாறு அணையில் மூழ்கி பொக்லைன் ஆபரேட்டர் சாவு

Update: 2021-10-09 18:03 GMT
நல்லம்பள்ளி, அக்.10-
தொப்பையாறு அணையில் மூழ்கி பொக்லைன் ஆபரேட்டர் பலியானார். நண்பர்களுடன் குளிக்க வந்த இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
பொக்லைன் ஆபரேட்டர்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி விடிவெள்ளி நகர் பகுதியை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் பழனிசாமி (வயது 35). இவரும், அவருடைய நண்பர்கள் செல்வம் (35), சங்கர் (40), தனசேகர் (32), விஜயகுமார் (35) ஆகியோர் தொப்பூர் அணையில் நேற்று குளிக்க சென்றனர்.
5 பேரும் அணையில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பொக்லைன் ஆபரேட்டர் பழனிசாமி மட்டும் அணையின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. நீண்டநேரம் ஆகியும் அவர் கரைக்கு திரும்பி வரவில்லை.
தண்ணீரில் மூழ்கி சாவு
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் பழனிசாமியை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி தொப்பூர் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் பொதுமக்கள் அணையில் தேடினர். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு பழனிசாமியை பிணமாக மீட்டனர்.
பின்னர் பழனிசாமி உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த பழனிசாமிக்கு, மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்